ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் - காலிஸ்தான் அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் இன்றுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்,
அதுதொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறது. இதில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஐந்தாண்டுகளுக்கு புரளி அழைப்பாளர்களை நோ-ஃப்ளை பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
தீவிரவாதி எச்சரிக்கை
இந்நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டுவரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங், ”நவம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்.
இந்த நாட்களில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்” என எச்சரித்துள்ளார். குர்பத்வந்த் சிங்கை கடந்த 2020 ஜூலை மாதம் மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது. அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் உள்ளது.
மேலும், அவர் நடத்தி வரும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கடந்த 2019ல் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.