நோன்பு கஞ்சியோடு பல் செட்டையும் விழுங்கிய 93 வயது மூதாட்டி - மீண்டது எப்படி?
மூதாட்டி ஒருவரின் உணவுக்குழாயில் சிக்கிய பல் செட்டை, துரிதமாக செயல்பட்டு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சிக்கிக்கொண்ட பல் செட்
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் (93) என்பவர் ரமலான் மாதம் விரதம் கடைப்பிடித்து நோன்பு இருந்துள்ளார். இவர் நோன்பை முடித்து நோன்புக் கஞ்சி அருந்தியபோது, அவர் அணிந்திருந்த பல் செட் கழன்று உணவுக் குழாயில் சென்று சிக்கிக்கொண்டது.
இதனையடுத்து வலியால் துடித்த தாயை, அவரது மகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார். ஏற்கெனவே குறைவான ரத்த அணுக்கள், ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரை,
சவாலான ஆபரேஷன்
உள் நோயாளியாக அனுமதித்த மருத்துவக் குழுவினர், அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்த மூதாட்டிக்கு 4 மணி நேரம் நடந்த சவாலான ஆப்ரேஷனை தொடர்ந்து, பல் செட்டை உள் நோக்கி கருவி மூலம் லாவகமாக எடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் இந்த அறுவை சிகிச்சையினால், 93 வயதான மூதாட்டி குணம் அடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவக் குழுவினருக்கு மூதாட்டியின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.