தமிழ்நாட்டில் தியான நிகழ்ச்சி; பிரதமர் மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு - திமுக மனு தாக்கல்!
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரி திமுக மனு தக்கல் செய்துள்ளது.
மோடி தியானம்
ஜுன் 4ல் நாடு முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் வகையில் பிரமதர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். மேலும், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வலுக்கும் எதிர்ப்பு
இந்நிலையில், இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளது. அதில், பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால்,
தியானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த தியான நிகழ்ச்சி என்பது தேர்தல் பரப்புரை யுக்தி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதி உடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது திமுக வை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கோரி புகார் அளித்துள்ளது.