இஸ்லாமிய வெறுப்பை கக்கும் மோடி; பாஜக தூக்கி எறியப்படும் - வைகோ கண்டனம்!
இஸ்மாமியர்கள் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ
முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பா.ஜ.க. தற்போது நடக்கும் பிரசாரத்தில் மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது. இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார்.
இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதமர் மோடி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பாடம் புகட்டுவார்கள்
காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ். இந்துத் துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவேதான் ஆர்.எஸ்.எஸ். தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார்.
இது கடும் கண்டனத்துக் குரியது. பிரதமரின் இந்த பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.