விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் வதந்திக்கு தேமுதிக கண்டனம்

Vijayakanth Tamil nadu
By Thahir Jul 04, 2022 07:59 PM GMT
Report

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளுக்கு தேமுதிக தலைமை கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் கடந்த 16 ஆம் தேதி, உடல் பரிசோதனைக்கு பின்பு தனது வீட்டிற்கு திரும்பி இருந்தார்.

விஜயகாந்த்  உடல்நிலை குறித்து பரவும் வதந்திக்கு  தேமுதிக கண்டனம் | Dmdk Condemns Rumors About Vijayakanth S Health

அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்காந்த் நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்ட பின் நீரிழிவு நோய் காரணமாக அவரது வலது காலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால், கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப் பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழக அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள், உள்ளிட்டோர் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறுவை சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திறும்பியதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேமுதிக கண்டனம் 

இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தின் போது தேமுதிக தலைமை கழகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து, தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும்,

ஏற்கனவே அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பிய சமூக வலைத்தள பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவானது அளிக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விஜயகாந்த் உடல் நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது இறுதியானது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றம் - பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!