எண்ணூர் எண்ணெய் கசிவு; நவீன தொழில்நுட்பமெல்லாம் இல்லை - 300 பணியாட்கள் தீவிரம்!
நவீன தொழில்நுட்பங்களை புகுத்தாமல் குவளையில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
எண்ணெய் கழிவு
சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது.
இதனால், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் அதோடு வந்த எண்ணெய் படலமும் வீடுகளின் சுவர்காள் மற்றும் உடைமைகளில் படிந்தது. ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட அப்பகுதிகளில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், மீன்கள் செத்து மிதக்கின்றன.
தொடரும் அவலம்
இதுகுறித்து மீனவர்கள் பேசுகையில், இங்கு இயல்புநிலை திரும்பி, நாங்கள்மீண்டும் கடலுக்கு செல்ல ஒருமாதத்துக்கு மேல் ஆகும். அதுவரைநாங்கள் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குவளையை கொண்டு நீரில் மிதந்த எண்ணெய் கழிவுகளை அள்ளி, டிரம்களில் ஊற்றி, சிபிசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். நிவாரணப் பணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன் வளம், வன உயிரின பிரிவு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
மேலும், எண்ணெய் கழிவு நீக்க நடவடிக்கை குறித்து சிபிசிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் படலம் மேலும் பரவாமல் இருக்க பூம் தடுப்பான்கள் 750 மீட்டர் நீளத்துக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-ம் தேதி நிலவரப்படி 325 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்கள் மூலமாக எண்ணெய் உறிஞ்சி அகற்றப்படுகிறது. எண்ணெய் கழிவை உயிரிகள் மூலம் சிதைவடைய செய்யும் பணியும் நடந்து வருகிறது. எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் 60 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.