எண்ணூர் எண்ணெய் கசிவு - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எண்ணெய் கசிவு
சென்னை மணலி பகுதியிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து கடலில் 20 கிலோமீட்டர் தூரம் வரை கச்சா எண்ணெய் கலந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அங்கு பெட்ரோலிய நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. மேலும், அங்கு மீன்பிடிக்க முடியவில்லை, அப்படி பிடித்தாலும் யாரும் அதை வாங்காத காரணத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில், எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்ததைக் கண்டித்தும், நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும் எண்ணூர் முகத்துவாரப் பகுதிக்குச் சென்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உத்தரவு
இதனைத் தொடர்ந்து எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரண்யா ஆகியோர் நேற்று ஆய்வு செய்த பின்னர் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் எண்ணெய் கசிவுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு சிபிசிஎல் வளாகம் மற்றும் தொடர்புடைய தொழிற்சாலையில் ஆய்வு செய்து நேற்று மாலை முதற்கட்ட விசாரணை அறிக்கையை மாநில எண்ணெய் கசிவு மேலாண்மை குழுவிடம் சமர்ப்பித்தது. மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கையை 2 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.