இவங்களாம் பேச்சாளர்களா..கல்விக் கூடங்களில் சோஷியல் மீடியா பிரபலங்கள் ஏன்? அமீர் கேள்வி!
மகாவிஷ்ணுவுக்கு எதிராக அநீதியை தட்டிக்கேட்ட தமிழாசிரியர் சங்கரை அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என முதல்வருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்!
இது குறித்து தமிழக முதல்வருக்கு இயக்குநர்அமீர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மஹாளின் ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல்,
அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.
சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன ககுத்திறகு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை இப்போது ஆன்மீகம் என்கிற போர்வையில் "முற்பிறவி பாவங்கள்" என்ற சொல்லின் மூலம் வர்க்க ரீதியாகவும்,
தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது! என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.
தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருத்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் திரு சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு
நின்றுவிடாமல் அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கல்விக் கூடங்களில் சோஷியல் மீடியா பிரபலங்கள் ஏன்?
மேலும், சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில்,
INSTAGRAM, REERS போன்ற சமூக வலைத்தளங்களிலும் YOUTUBE ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது. எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ,
முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.
அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக்கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும்,
வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்படஅறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே.!
திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில்
நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.