சித்தர் சொல்லிதான் பேசினேன் - மகா விஷ்ணு வாக்குமூலம்
என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகா விஷ்ணு
சென்னையில் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு முற்பிறவியில் செய்த பாவங்கள்தான் காரணம், மந்திரம் சொன்னால் வானத்தில் பறக்கலாம் என மூட நம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பிற்போக்கு கருத்துக்களை மாணவிகள் மத்தியில் பேசி வந்தார்.
கைது
இவரின் பேச்சுக்கு அங்கிருந்த சங்கர் என்ற ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நபர் ஆசிரியர் சங்கருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து மூட நம்பிக்கை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கரை அழைத்து பாராட்டிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அந்த நபரை சும்மா விடமாட்டேன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த இவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த தமிழக காவல் துறை, மாற்று திறனாளிகளை இழிவு படுத்தியது போன்ற குற்றங்களுக்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது.
சித்தர்
இந்நிலையில் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் "சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். அவர்களே என்னை வழிநடத்துகிறார்கள். சித்தர் சொன்னதால்தான் பேசினேன்.
பள்ளியில் தவறாக எதுவும் பேசவில்லை. மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் தான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை." என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.