லட்டுவின் தெய்வீகத்தன்மை, புனிதம் மீட்கப்பட்டது - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி லட்டுவின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டதாகத் தேவஸ்தானம் கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலத்தில் 4 வது முறையாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,கடந்த சில தினங்களுக்கு முன் அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர்,
"ஜெகன் மோகன் ஆட்சியில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து லட்டு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, ஆளிவிரை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட லட்டில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேவஸ்தானம்
மேலும் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புண்ணியக் கோயிலில் மகா பாவங்கள் நடைபெற்று உள்ளதாக அர்ச்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவிலைச் சுத்தம் செய்து சிறப்புப் பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்தச்சூழலில், திருப்பதி தேவஸ்தானம் அதன் எக்ஸ் பக்கத்தில் பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளது.
அதில், அதன்படி ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் தெய்வீகத்தன்மையும், தூய்மையும் இப்போது கறைபடவில்லை எனவும்,லட்டு பிரசாதத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக உள்ளது என்றும் பதிவிடப்பட்டுள்ளது.