லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்..5 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் - அர்ச்சகர் பரபரப்பு பேட்டி!
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்து மகா பாவம் செய்துவிட்டதாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.
ஏழுமலையான் கோயில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் வெங்கடேஸ்வர பெருமாளுக்குப் படைக்கப்படும் லட்டு , பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோயிலில் அமைந்திருக்கும் சமையலறையில் மிகவும் பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது என முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுத் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஆய்வு நடத்திய போது , லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிசக் கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, ஆளிவிரை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமணர் கூறுகையில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்தததை நான் பல வருடங்களுக்கு முன்பே கூறினேன். ஆனால் அதிகாரிகள் மற்றும் கோயில் அறக்கட்டளையின் தலைவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.
விலங்கு கொழுப்பு
தற்போது புதிய அரசு இதனைக் கையில் எடுத்துள்ளது. இந்த அரசு அனைத்து குழப்பங்களையும் நீக்குவதாக உறுதியளித்துள்ளனர் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,'' திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளால் தயாரிக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புண்ணியக் கோயிலில் இதுபோன்ற மகா பாவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தில நெய் வாங்குவது நிறுத்தப்பட்டு, கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடமிருந்து நெய் வாங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.