வடா பாவ் விற்கும் பெண்; தினமும் ரூ.40,000 சம்பாத்யம் - பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்பு!
இளம்பெண் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.40,000 வருமானம் ஈட்டுவதன் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
வடா பாவ் விற்பனை
டெல்லியைச் சேர்ந்தவர் சந்திரிகா தீக்சித். இவர் அங்குள்ள தெருவில் தள்ளுவண்டி கடையின் மூலம் வடா பாவ் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம், ஒரு நாளைக்கு ரூ.40,000 வருமானம் ஈட்டி வருகிறார்.
நன்கு படித்து நல்ல வேலை கிடைத்து பணியாற்றி வந்த சந்திரிகாவுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் வந்துள்ளது. இதனையடுத்து வடா பாவ் விற்பனையை தொடங்கியுள்ளார்.
இந்த சிற்றுண்டியை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர். சந்திரிகாவுக்கு மக்கள் வடா பாவ் கேர்ள் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இவர் பிரபலங்கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.
1 நாள் வருமானம்
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடின உழைப்பின் காரணமாக நாளொன்றுக்கு ரூ.40,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். நீங்களும் இதேபோன்று சம்பாதிக்கலாம். ஆனால், அதற்கு ஸ்மார்ட்போன், நெட்பிளிக்ஸ் போன்றவற்றை தியாகம் செய்ய வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தெருவோரத்தில் தள்ளுவண்டியில் சாதாரணமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால், கிடைத்த வாய்ப்பை திறம்பட செய்ய கடினமாக உழைத்தேன்.
இதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.