இது 1 நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம் - மோசமான நிலையில் தலைநகரம்!
காற்று மாசை கட்டுப்படுத்தும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
காற்று மாசுபாடு
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அந்த வகையில், காற்றின் தரக் குறியீடு 441 ஆக பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நாளுக்கு ஒருவர் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான அளவில் காற்றில் மாசு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் சுவாசக் கோளாறு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
நிலை 3 அமல்
இந்நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல் “நிலை 3” எனும் செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை.
BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை. மின்சாரம், சிஎன்ஜி அல்லாத வெளிமாநில பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.