டெல்லி சலோ: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - 2 நாட்களில் முடிவு!
4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி சலோ
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணியில் ஈடுபட முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால், ஹரியானா அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.
டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கிடையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படவில்லை.
போராட்டம் நிறுத்தம்
இந்நிலையில், தொடர்ந்து 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்றனர். அதன்பின், இதுதொடர்பாக பேசிய விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தர்,
விவசாயிகள் கூட்டமைப்புடன் நாங்கள் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்துவோம். அதன்பிறகு முடிவுகளை எடுப்போம். கடன் தள்ளுபடி மற்றும் பிற கோரிக்கைகள் ஆகியவை நிலுவையில் உள்ளது. இந்த கோரிக்கைகளும் அடுத்த இரண்டு நாட்களில் நிறைவேறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை நிறுத்தி வைக்க உள்ளோம். 21 ஆம் தேதிக்குள் ஏற்காவிடில் மீண்டும் டெல்லி செல்லும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.