தடையை மீறி படையெடுக்கும் விவசாயிகள்; உச்சக்கட்ட பதட்டத்தில் தலைநகர் - போராட்டம் எதற்காக?
விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக அணிவகுக்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த சமயத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணிக்கு தடை
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. எனவே, தொடர்ந்து திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியாக சென்று இன்று டெல்லியை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருந்து ஹரியானா வழியாக 2500 விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக செல்லவுள்ளனர். இதனால், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க ஹரியானா,
உத்தரப்பிரதேசம் மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், டெல்லி - ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவதை தடுக்கவும் சமூக வலைத்தளங்களையும் கண்காணித்து வருகின்றனர்.