வேளாண் சட்டம் பற்று முழுமையாக தெரிந்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் - ராகுல் காந்தி

india country world
By Jon Feb 09, 2021 10:21 AM GMT
Report

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு முழுமையாகத் தெரிந்தால், நாடு முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாகத் தனது வயநாடு தொகுதிக்குச் சென்றுள்ளார்.

கல்பேட்டா நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மீதான சமீபத்திய கொலைவெறித் தாக்குதல்.

இதனால்தான் விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். வேளாண்துறைக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெரும்பாலான விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களின் ஷரத்துகள், அம்சங்கள், முழுமையான விவரங்கள் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு தெரியவரும்போது அல்லது தெரிந்தால், இப்போது டெல்லியில் நடக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடக்கும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளுக்கு எதிராகச் செயல்பட வைக்கின்றன. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் வர சில மாதங்கள் இருக்கும் நிலையில், கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு அவ்வாறு எந்த நெருக்கடியும் இல்லை.

இங்கு சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை மிகவும் சவுகரியமாக வழக்குகளை விசாரிக்கின்றன நாட்டில் இப்போது இருக்கும் சூழல் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் என்ன நடக்கிறது எனப் பார்க்கிறார்கள். 2 அல்லது 3 பெரும் கோடீஸ்வரர்களுக்காகத்தான் இந்தியாவைப் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார். ஒவ்வொரு சிறிய நிறுவனமும் குறிப்பிட்ட 4 தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நீங்கள் நாளேடுகளைப் பாருங்கள். காங்கிரஸ் கட்சியை அதிகமாக பாஜக விமர்சிக்கிறதா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கிறதா? கேரள முதல்வரைத் தாக்கி பிரதமர் மோடி பேசுகிறாரா அல்லது காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கிறாரா எனக் கவனியுங்கள்.

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது பாஜக அமைதிப் போக்கைக் கையாள்கிறது. நாட்டில் உள்ள 5 முதல் 10 நபர்கள் விவசாயிகளின் ஒவ்வொரு உற்பத்தியையும் திருடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளரிடம் இருந்தும் திருடுகிறார்கள். மண்டிகளில் பணியாற்றும் தொழிலாளரிடம் இருந்தும், லாரி ஓட்டுநர்களிடம் இருந்தும் திருடுகிறார்கள்.

இந்தத் திருட்டை நிர்வாகிப்பவரே பிரதமர்தான். இது விவசாயிகளுக்கு எதிரான குற்றம் அல்ல, தேசத்துக்கு எதிரான குற்றம்''. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.