சென்னையில் பிரபல யூடியூபருக்கு கொலை மிரட்டல் - 3 போதை ஆசாமிகள் கைது!
சென்னையில் பிரபல யூடியூபரை மிரட்டிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை மிரட்டல்
சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் பிரபல யூடியூபர் நந்தா என்பவர் வீடியோ எடுத்தவாறு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் மது அருந்திக்கொண்டிருந்த சிலர் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் நந்தாவின் கேமரா மற்றும் செல்போன்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அவரை தகாத வார்த்தைகளாலும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த போதை ஆசாமிகளிடம் ஆயுதம் இருந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்ற பயத்தில் நந்தா தப்பி வந்துள்ளார்.
3 பேர் கைது
இதுதொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் யூடியூபர் நந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் போதை ஆசாமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.