T20 World Cup: பைனலில் இந்தியா விளையாடும்; ஆனால்.. இது நடக்கணும் - CSK பயிற்சியாளர்!
இந்திய அணி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டி வரை இந்திய அணி நிச்சயம் செல்லும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "அமெரிக்க ஆடுகளங்களை தாண்டி வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
இந்திய அணி
ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன். அதே போன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச முடியாது என்ற கருத்தை நான் எப்போதும் ஏற்பவன் கிடையாது.
எந்த பந்துவீச்சாளர் வேண்டுமானாலும் எந்த ஒரு வீரருக்கு எதிராகவும் சிறப்பாக பந்துவீக்கலாம். அன்றைய நாளில் பவுலர்களின் பலம் எவ்வாறு இருக்கிறதோ அதனைப் பொறுத்து தான் போட்டி அமையும்.
என்னை கேட்டால் நிச்சயம் இந்திய அணி தற்போது உள்ள வீரர்களின் பலத்தை வைத்து இறுதிப் போட்டி வரை செல்லும். இறுதிப்போட்டிக்கு செல்லும் பட்சத்தில் எப்படி விளையாடுகிறதோ அதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும்" என்று தெரிவித்துள்ளார்.