இதை முதல்ல கத்துக்கோ.. அப்புறம் இந்தியாவுக்காக ஆடலாம் - கடுப்பான ஸ்ரீசாந்த்!
இளம் வீரர்கள் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
ரியான் பராக்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 531 ரன்கள் அடித்து அசத்திய ரியான் பராக் முதல் முறையாக இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார்.
இதனிடையே தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று ரியான் பராக் தெரிவித்திருந்தார். மேலும், வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதுகுறித்து கவலைப்படுவேன் என்றும், ஃபைனலில் எந்த அணி வென்றுள்ளது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஸ்ரீசாந்த்
ரியான் பராகின் இந்த கருத்துகள் இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரியான் பராக் போன்ற இளம் வீரர்கள் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது "தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் கூறியிருந்தனர். முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு நான் சொல்வேன்.
அதன் பிறகே கிரிக்கெட்டின் ரசிகனாக நீங்கள் இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக இதயத்திலிருந்து, இந்தியா டி20 மற்றும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.