இந்திய அணிக்கு 3 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த 3 கேட்சுகள்!
இந்திய அணி 3 உலகக்கோப்பைகளை கைப்பற்ற 3 கேட்சுகள் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி 3 உலகக்கோப்பைகளை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்த 3 கேட்சுகளை பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர்.
கடந்த 1983-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை அப்போதைய இந்திய கேப்டன் கபில்தேவ் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து அசத்தினார்.
அந்த கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல், முதல்முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது. பின்னர் கடந்த 2007-ம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
3 கேட்சுகள்
இந்த போட்டியில் கடைசி ஒரு ஓவரில் பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது, ஜோகிந்தர் சர்மா பந்து வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை அவர் ஃபுல் டாஸாக வீச, அதை ஸ்கூப் ஷாட் முறையில் மிஸ்பா அடித்தார்.
அப்போது ஷார்ட் ஃபைன் லெக் பகுதியில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீசாந்த் அந்த கேட்சை அபாரமாக பிடிக்க உலகக்கோப்பை இந்தியா வசமானது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீச, முதல் பந்தை மில்லர் பவுண்டரி எல்லைக்கு தூக்கியடித்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் அதை லாகவமாக கேட்ச் செய்து வெற்றியை உறுதி செய்ததுடன், இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இந்த 3 கேட்சுகளும் உலகக்கோப்பையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
The best catch in cricket history! pic.twitter.com/RshEYoMkUv
— KK NEHRA (@Krishan88701400) June 29, 2024