மோசடி புகாரில், இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீசாந்த்
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்டதால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட இவருக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு இவரின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இருந்தும் 2021 மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணி நிர்வாகமும் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கண்ணூரை சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "கடந்த 2019ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் என்னை அணுகினர்.
மோசடி புகார்
அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பயிற்சி மையத்திற்கு முதலீடு செய்தால் என்னையும் பங்குதாரராக நியமிப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பல்வேறு தேதிகளில் ரூ.18.7 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420ன் கீழ் ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.