பாலஸ்தீன ஆதரவு: விராட் கோலியை கட்டியணைத்த இளைஞர் - அவர் யார் தெரியுமா?
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகக்கோப்பை போட்டியின் போது விராட் கோலியை கட்டியணைத்த இளைஞர் பற்றிய தகவல்.
மைதானத்திற்குள் நுழைந்த நபர்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், இந்திய வீரர் விராட் கோலியின் தோள் மீது கைபோட்டு கட்டியணைக்க முயன்றார்.
அவரின் டீ-சர்ட்டின் முன் பகுதியில், "பாலஸ்தீன் மீது குண்டு வீசாதீர்கள்" என்றும், பின் புறத்தில் ஃபிரீ பாலஸ்தீன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முகத்தில் பாலஸ்தீன கொடியாலான மாஸ்க்கை அவர் அணிந்திருந்தார். உடனடியாக அந்த இளைஞரை பாதுகாவலர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
யார் அந்த இளைஞர்?
இந்நிலையில், ஒரு பெரிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்ட அந்த இளைஞர் யார்? என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்து வருகின்றன.
அந்த இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எனது பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன். விராட் கோலியை சந்திப்பதற்காகவே நான் மைதானத்திற்கு உள்ளே சென்றேன். நான் பாலஸ்தீனை ஆதரிக்கிறேன்" என்றார். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞரின் முழு பெயர் வென் ஜான்சன் என்பது தெரியவந்தது.
மேலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் சீன-பிலிப்பைன் மரபை சேர்ந்தவராவார். ஹமாஸ் உடனான போரில் பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை நிறுத்தக்கோரி இவ்வாறு செய்தததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.