கூரியர் மோசடி: மும்பை போலீஸ் எனக்கூறி பணம் பறிப்பு - சென்னையில் பரபரப்பு சம்பவம்!
மும்பை போலீஸ் எனக் கூறி நபர் ஒருவரிடம் பணம்பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணம் பறிப்பு
சென்னை கொளத்தூர் திருப்பதி நகரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மும்பை கிளையிலுள்ள Fedex கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும்,
மும்பையிலிருந்து நீங்கள் தைவானுக்கு அனுப்பிய பார்சலில் 1 லேப்டாப், ரூ.35,000 பணம் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களிடம் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மும்பை போலீசார் என்று கூறி வேல்முருகனை தொடர்பு கொண்ட மற்றோரு நபர், "நீங்கள் போதைப் பொருட்கள் கொண்ட பார்சலை அனுப்பியுள்ளதால், உங்களை கைது செய்ய வருகிறோம்” என மிரட்டியுள்ளார்.
5 பேர் கைது
மேலும், “நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பினால், அதனை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி விசாரணை செய்கிறோம்” என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மர்ம நபர் கூறிய வாங்கி கணக்கிற்கு வேல்முருகன் ரூ.49,324 பணத்தை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தன்னை மர்ம நபர்கள் மோசடி செய்து பணத்தை பறித்தது வேல்முருகனுக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சைபர் க்ரைம் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், ராஜ்குமார், கணேஷ் ராஜ், எபினேசர், ரத்தினராஜ், ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.