'The Real Kerala Story' கேரள நபருக்கு சவுதியில் தூக்கு தண்டனை - ரூ.34 கோடி திரட்டிய மக்கள்!
சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபரை மீட்க அம்மாநில மக்கள் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கு தண்டனை
கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம். இவர் கடந்த 2002-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு சென்று, மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரிக்கும் பணியில் சேர்ந்துள்ளார். அந்த சிறுவனை ரஹீம் ஒரு நாள் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சிவப்பு சிக்னலைத் தாண்டி காரை ஓட்டுமாறு சிறுவன் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும், அந்த சிறுவன் ரஹீம் மீது எச்சிலைத் துப்பி அடித்துள்ளார். அப்போது சிறுவனின் சுவாச கருவியை ரஹீம் தவறுதலாக தொட்டபோது, அது கையோடு வந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்துள்ளனர்.
இதனால் சவுதி சட்டப்படி கடந்த 18 ஆண்டுகளாக ரஹீம் சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ரஹீமுக்கு தூக்கு தண்டனை விதித்த சவூதி உச்சநீதிமன்றம், அந்த தண்டனையை 2022-ம் ஆண்டு உறுதி செய்தது. இதனிடையே ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்ட சிறுவனின் குடும்பத்தினர், வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் ரூ. 34 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவித்தது.
நிதி திரட்டல்
ஆனால், அவரது வயதான தாயார் தன்னால் எப்படி ரூ.34 கோடி திரட்ட முடியும் என்று கலங்கி நாள்தோறும் பிரார்த்தனையை மட்டுமே கண்ணீராக முன்வைத்திருந்தார். இந்நிலையில் ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினர் இணையவழியில் பொது நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்தனர்.
இந்த முயற்சியில் சில நாட்களுக்கு முன்பு வரை சொற்ப நிதியே திரட்டப்பட்டது. ஆனால், கடந்த 4 நாட்களில் முழுத்தொகையும் திரட்டப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நிதி திரட்டும் பனி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் கைகோர்த்துள்ளனர். சில மசூதிகளில் தொழுகைக்கு வரும் நபர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இதற்கு நிதியளித்த பெரும்பாலானோர் ஏழைகள் தான். இதன் மூலம் தற்போது அந்த ஏழைத் தாயின் மகனை மீட்கும் கனவு நிஜமாகியுள்ளது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு "இதுதான் கேரளத்தின் உண்மையான கதை" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.