நொடியில் மயமான பேப்பர்.. சர்ச்சையில் சிக்கிய திருச்செந்துார் கோவில் நிர்வாகம் - அதிர்ச்சி தகவல்!
கடந்த ஆண்டு சஷ்டி விழாவின் போது, விரைவு தரிசன கட்டணமாக, பக்தர்களிடம் இருந்து, 1000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
திருச்செந்தூர்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகச் சிறந்து விளங்குவது திண்டுக்கல்லில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி விழா. இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா, நவ., 2ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெற உள்ளது . இதனைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் 7ம் தேதி நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில், 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சஷ்டி விழாவின் போது, விரைவு தரிசன கட்டணமாக, பக்தர்களிடம் இருந்து, 1000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் இந்தாண்டும் சஷ்டி விழா நாட்களில் விரைவு தரிசன கட்டணம் என்ற பெயரில், 1,000 ரூபாய் வசூலிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சர்ச்சை
இதுதொடர்பாக, பெயரளவில் பக்தர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறும் ஒரு அறிவிப்பு நேற்று கோவில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. வரும் 3ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. திடீரென அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த பேப்பர் மாயமானது.
இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை என, கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.