வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி இதுதான்!
மக்களவை தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் பாஜக 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். கேரளா மாநில வயநாடு தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழப்புழா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூர் நான்காவது முறையாக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 2009 முதல் திருவனந்தபுரம் எம்.பியாக உள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல்
முன்னாள் முதல்வர் கருணாகரன் மகன் கே.முரளீதரன் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன் கன்னூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலத்தில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தம்பி டி.கே.சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக எம்.பியாக உள்ள இவர்,
2019 மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோக தொகுதியில் போட்டியிடுகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கோவன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ராகுல்காந்தி
39 வேட்பாளர்களில் 24 வேட்பாளர்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள். 15 வேட்பாளர்கள் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள்.காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கேரளா மாநிலத்துக்கு 16 வேட்பாளர்களும், கர்நாடக மாநிலத்துக்கு 7 வேட்பாளர்களும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 6 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தெலங்கானா மாநிலத்துக்கு 4, மேகாலயா 2, லட்சத்தீவு நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா 1 என வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு முடிவாகாத நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.