அண்ணாமலை மாட்டிறைச்சி தந்தால் விரும்பி சாப்பிடுவோம் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் தமிழர்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்" என கூறியிருந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் "என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.
அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சி கறி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம். நீங்கள் தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தை தாருங்கள்.
பரவாயில்லை, வாங்கி கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.