ஆபரேஷன் சிந்தூர்; மோசமாக விமர்சித்த பேராசிரியை - பணியிடை நீக்கம்
ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், போர் பதற்றம் நீடித்து வருகிறது.
பேராசிரியை பணியிடை நீக்கம்
இந்நிலையில் செங்கல்பட்டு பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லோரா. இவர் சமூக வலைத்தளங்களில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் 'இந்திய ராணுவம் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளைக் கொன்றுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு இன்மை ஏற்படும்.
உணவு பற்றாக்குறை ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, பேராசிரியை லோராவை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.