கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆதீனம் மறைவு
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 55.
இந்நிலையில், கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவர். பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் குருபூஜை செய்யும் உரிமையைப் பெற்றவர் ஆவார். அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
பாஜக தமிழ்நாடு, சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை, சசிகலா இரங்கல்
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அவரை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.