செய்தியாளர்... ஆன்மிகவாதி.. அரசியல்வாதி... அருணகிரி ஆதீனம் கடந்து வந்த பாதை!
தமிழகத்தில் உள்ள பழமையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீனம் மிக முக்கியமான ஒன்று. இந்த ஆதீனத்தின் 292-வது மடாதிபதியானார் குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் (77) . 1,500 ஆண்டிற்கு மேலான தொன்மை வாய்ந்த மதுரை ஆதீனத்தைத் திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார்.
தற்போது இந்த மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மடாதிபதியாக இருந்து காலமான அருணகிரிநாதர் தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக 27.5.1975-ல் பொறுப்பேற்றார். 291-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் மரணம் அடைந்த பிறகு, 14.3.1980-ல் போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர்.
அன்று முதல் அவருடைய பெயர் 292-வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார் ஆன்மிகப் பணிக்கு வருவதற்கு முன் தமிழ் மாலை நாளிதழில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆன்மிகப்பணியிலிருந்தாலும் அரசியல் விஷயங்களிலும் கருத்துச் சொல்லி வந்தார். 1980 ஆண்டிலிருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர், சைவ நெறி பரப்புதலுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பல நல்ல விஷயங்களைச் செய்து வந்துள்ளார். சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.
அரசியல் பணி:
எம்.ஜி.ஆர், கருணாநிதி, பழ.நெடுமாறன் உட்பட பல்வேறு திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அரசியல் தலையீடு இல்லாத இவருக்கு சசிகலா நடராஜன் மூலம் அரசியல் தலையீடும் அதிகமானது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக மாறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்பை பெற்ற ஆதீனம் அவருக்கு ஆதரவாக பல்வேறு குரல் கொடுத்தார் இதனால் ஒரு அரசியல் சாமியாராக பார்க்கப்பட்ட ஆதினம் அருணகிரிநாதர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தனது அரசியல் ஈடுபாட்டினை குறைத்துக்கொண்டார்.
அருணகிரி ஆதினத்திற்கு எப்போதும் புல்லட் பைக் மீது அலாதிப் பிரியமாம். அதனால் தற்போது அவர் ஓட்டிய புல்லட் பைக் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. தமிழ் மொழி மீது பற்றுக்கொண்ட ஆதினம் அருணகிரிநாதர் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னைக்காக கூட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அருணாகிரி நாதர் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது, இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார்.
நித்யானந்தா சர்ச்சை:
அத்துடன் நித்யனந்தாவிற்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் பட்டமளித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நியமனத்தை காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் கடுமையாக தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின ஆகவே நித்யானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார்.
இதையடுத்தே நித்யானந்தா நியமனம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாத பரமாச்சாரிய குருமகா சந்நிதானம், சிறந்த தமிழ் புலமையும் பன்மொழி புலமையும், கனீர் என்ற குரல் வளமும் பேச்சாற்றலும் மிக்கவர்கள். மதுரை ஆதீனகர்த்தர் மறைவு தமிழ் இனத்திற்கும் சைவப் பெருமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிற ஆதின மடாதிபதிகள் தெரிவிக்கின்றனர்.