‘நித்தியானந்தாலாம் ஒரு ஆளே கிடையாது - இங்கு வந்தால் நிச்சயம் கைதுதான்’ – மதுரை ஆதீனம் எச்சரிக்கை
நித்தியானந்தா இங்கு வந்தால் நிச்சயம் கைதாகி விடுவார் என்று 293வது மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்திருக்கிறார். கடந்த 13 ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனையடுத்து, மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கடந்த 23ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தர்மபுரம் ஆதீனங்களும் கலந்து கொண்டார்கள்.
இதனையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கடும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் கிளம்பின. பிறகு 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார்.
அத்துடன் இளைய சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை அருணகிரிநாதர் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 293-வது மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது -
நித்தியானந்தா ஒரு பொருட்டே கிடையாது. அவர் இங்கு வந்தால் நிச்சயம் கைதாகி விடுவார். மக்களோடு மக்களாக நான் இருப்பேன். எல்லா அரசியல் கட்சிகளுடனும் நான் தொடர்பு வைத்துள்ளேன். சமூக நல்லிணக்க மாநாடு அழைத்தால் நிச்சயம் செல்வேன். நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.