மோடியின் கண்ணீரை அவர் கண்களே நம்பாது; அப்புறம் எப்படி..? முதலமைச்சர் கொந்தளிப்பு!

M K Stalin Narendra Modi
By Sumathi Mar 30, 2024 09:30 AM GMT
Report

பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோடி நம்பிக்கை 

நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,

stalin - modi

"எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால் பேச முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்க சொல்ல வேண்டும். நான் தமிழகத்தில் இருக்கும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன்.

எனவே, அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று டெல்லி வர வேண்டும். அண்ணாமலை வெற்றிக்கு பூத் நிர்வாகிகள் உத்தரவாதம் தர வேண்டும்” என்றார். இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

இது தமிழ்நாடு! உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இது தமிழ்நாடு! உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 சாடிய முதல்வர் 

"நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?. ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு! விமானங்களில் மட்டுமல்ல;

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.