அதிமுக.வும், பாஜக.வும் சண்டை போடுவது போல நடிக்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அதிமுக.வும், பாஜக.வும் சண்டை போடுவது போல நடிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
பயிற்சி பாசறை கூட்டம்
திருப்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது "வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு நீங்கள்தான் பொறுப்பாளர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை காரணமாகத்தான். தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியுமா? ஒதுக்குவீர்களா? அந்த ஒரு மணி நேரத்தை 'பூத்' வேலைக்காக ஒதுக்குங்கள்.
மு.க. ஸ்டாலின் பேச்சு
அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ அதை தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள்' என்று மு.க. ஸ்டாலின் பேசினார். மேலும் பேசிய அவர் "கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்க கூட தகுதியில்லாத கட்சி என்று நம்மை விட அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.
அதனால்தான் அதிமுக.வை பயமுறுத்தி அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். உள்ளே நட்பாக இருக்கிறார்கள். எதற்காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆதரித்தால், அவர்களின் ஊழல்களுக்கு பா.ஜ.க.வும் பொறுப்பேற்க வேண்டி வரும். பாஜக.வை ஆதரித்தால், பா.ஜ.க.வின் மதவாதத்திற்கு அ.தி.மு.க.வும் துணைபோக வேண்டி வரும். அதனால் நடிக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அ.தி.மு.க கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை.
பாஜக.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பாஜக.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பாஜக தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் அதிமுக.வுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தரவேண்டும்" என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.