செவ்வாய் கிரகம் போல் மாறிய மொத்த நகரம்; பீதியில் மக்கள் - நாசா விளக்கம்!
ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது.
ஏதென்ஸ்
கிரீஸ் நாட்டின் தலைநகரம் ஏதென்ஸ். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் நகரமாக உள்ளது. இந்நிலையில், ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், அகோரா உள்பட மொத்த நகரமே செவ்வாய் கிரகம் போல் மாறியது. இதனை கண்ட சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசி்களும் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து இதற்கு் காரணம் என்னவென்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் அளித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வழக்கம்.
புழுதிப் புயல்
அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சகாரா பாலைவனத்தின் புழுதி மண் துகள்கள் கலந்ததால் மேகக் கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், மேகத்தில் மண் துகள்கள் அதிகளவில் இருப்பதன் காரணமாக மாசுபாடு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்சனை ஏற்படலாம். கண்ணில் மாசு துகள்கள் படும்போது பிரச்சனை ஏற்படுத்தலாம். சுவாசப் பிரச்சனையும் ஏற்படலாம். 2018க்கும் பிறகு கிரீஸ் நாட்டை தாக்கும் மோசமான புழுதிப் புயல் இது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த ஆரஞ்சு நிற வானம் மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.