கோயில் அருகே சடலமாகக் கிடந்த சிறுவர்கள் - வேலூர் குடியாத்தத்தில் நரபலி?அதிர்ச்சி தகவல்!
கோயில் அருகே சிறுவர்கள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் யோகராஜ்.கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 6வயது மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவருடைய நண்பரும், கட்டட ஒப்பந்ததாரருமான வசந்தகுமார், யோகராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது யோகராஜின் மனைவியிடம் பேசிய வசந்தகுமார், அவர்களின் 6 மற்றும் 4 வயதுக் குழந்தைகளைத் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
மேலும் நீண்ட நேரமாகியும் குழந்தைகளும், வசந்தகுமாரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த யோகராஜ் மற்றும் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .
அப்போது வசந்தகுமாரின் சொந்த கிராமமான குடியாத்தம் அடுத்த சிங்கல் பாடி ஏரிப்பட்டி கிராமத்தில் உள்ள கோயில் பின்புறம் 2 குழந்தைகளும் சடலமாகக் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வசந்தகுமாரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
நரபலி?
இந்த சூழலில் அவர் பாட்டி வீட்டில் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைக்கவே வசந்தகுமாரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து வசந்தகுமார் பற்றி கிராம மக்கள் கூறுகையில்,''கடந்தாண்டு வசந்தகுமாருக்குத் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவர் மன அழுத்தத்திலிருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் கோயில் அருகே சிறுவர்கள் இறந்து கிடந்ததால், நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.