ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை மரணம் - அதிர்ச்சி பின்னணி!
ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை பலியாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்-ஹமாஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து, சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிடுகிறது.
இதற்கிடையில், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைகுலைந்த காசா
இந்நிலையில், காசாவில் நிகழ்ந்துவரும் கடந்த 6 மாத மோதலில், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை தனது உயிரை இழக்கிறது என்று உலகளாவிய குழந்தை நல அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் அதன் அமைப்பின் தலைவர் Daniela Fatarella,
இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்து வரும் மோதலில், ஏறத்தாழ 26,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், தாங்கள் படித்த பள்ளிகளையும், தங்கள் அன்றாட வாழ்க்கையையும் இழந்து, இன்று பட்டினியால் வாடுகிறார்கள்.
இத்தகையதொரு மோசமான நிலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உடனடி மற்றும் உறுதியான போர்நிறுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலை உறுதிப்படுத்த உலகம் இப்போது செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த குழந்தை நல அமைப்பு, பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு அத்தியாவசிய சேவைகளையும் ஆதரவையும் 1953-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.