இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் உள்ள மருத்துவமனை மீது சரமாரியான தாக்குதல் - 500 பேர் பலி!
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலபேர் உயிரிழந்தனர். பல அப்பாவி பொதுமக்களையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
மருத்துவமனை மீது தாக்குதல்
இந்த தாக்குதலால் காசாவில் உள்ள 23 லட்சம் மக்கள் மின்சாரம், சுகாதார வசதிகள், தண்ணீர், போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் உச்சம் தொட்டுள்ளது.
நேற்றைய 11வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின.
இந்த தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.