உச்சத்தில் போர்; இஸ்ரேலுக்கு பயணம் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - எதற்காக தெரியுமா?
இஸ்ரேல்-ஹமாஸ் போர் உச்சமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் செல்கிறார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலபேர் உயிரிழந்தனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தில் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலால் காசாவில் உள்ள 23 லட்சம் மக்கள் மின்சாரம், சுகாதார வசதிகள், தண்ணீர், போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.
ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்
இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் உச்சம் தொட்டுள்ளது. இந்த போரில் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது. மேலும், "இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்.
ஆனால் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை இஸ்ரேலுக்கு பயணம் செல்கிறார் ஜோ பைடன்.
இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது " ஹமாஸ் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.