வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பாஜக அரசு, மாநிலங்களை சமமாக மதிப்பது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தருமபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
மேலும், ரூ.560 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தருமபுரி என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது ஒகேனக்கல். 2008-ம் ஆண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்று நிதி பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முகாம் தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது. மாணவர்கள், உழவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெறுகின்றனர்.
ஸ்டிக்கர் ஒட்டுகிறார்
10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டியவர்களால், திமுகபோல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா?. திமுக கொண்டு வந்த ஒக்கேனக்கல் திட்டத்தை முடக்கியது தான் அதிமுகவின் சாதனை.
அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து செயல்படும் அரசு தான் திராவிட மாடல் அரசு. ஆனால் பாஜக அரசு, மாநிலங்களை சமமாக மதிப்பது இல்லை. மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறது. நிதி ஆதாரத்தை அழிக்கிறது. தேர்தல் வரக்கூடிய நேரத்தில் மட்டும்தான் மக்களை சந்திக்கிறார் மோடி. சிலிண்டர் விலையை 10 ஆண்டுகளாக 500 ரூபாய் உயர்த்தி விட்டு, இப்போது வெறும் 100 ரூபாய் குறைக்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க விடமாட்டேன் என பிரதமர் கூறுகிறார். ஆனால் வளர்ச்சி நிதியை அவர் வழங்கவில்லை. மாநில அரசின் பணத்தை வாங்கி தான் பிரதமர் தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார். வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மக்களும், திமுக அரசும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். இது கோடிக்கணக்கான குடும்ப மக்களுக்கான ஆட்சி" என்று தெரிவித்துள்ளார்.