சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே; இது 18வது முறை - தொடர்ந்து பெரும் சிக்கல்!
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே நடப்பாண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
ஆனால், ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இடையிலான 28 கிலோமீட்டர் தூர சாலையை விரிவாக்கம் செய்ய விடப்பட்ட டெண்டர் 18 முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கப் பணிகள் இழுபறியாக அதிகாரிகள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
டெண்டர் ரத்து
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை என்பது பல லட்சம் வாகனங்கள் பயணிக்கக் கூடிய முக்கியமான சாலை. ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை சாலையானது ஆந்திர மாநிலத்தின் சித்தூர் வழியாக கர்நாடகா வரை செல்வதற்கும் முக்கியம்.
இதன் மூலம் தான் ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து சித்தூருக்கு செல்லும் ட்ரக்குகள் விரைவாக பயணிக்க முடியும். மேலும், சென்னை துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் செல்வதற்கும் முக்கியமான வழித்தடமாக அமைந்துள்ளது.
திருவண்ணாமலை, ஆரணி வழியாக பெங்களூரு செல்வோர் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை ரூட்டிற்கு தான் வர வேண்டும்.
நிர்வாக ரீதியிலான காரணங்களால் தற்போது வரை டெண்டரை இறுதி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.