CWC யில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட்; இதுதான் காரணம் - அந்த இடத்தில் அடுத்து யார்?
பிரபல நிகழ்ச்சியில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை மக்கள் பலரும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று அழைப்பதுண்டு.
4 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே நான்கு சீசன்களிலும் நடுவர்களாக வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும் இருந்தார்கள்.
இதனையடுத்து, வரப்போகும் சீசன்களிலும் இவர்களே நடுவர்களாக இருப்பார்கள் என மக்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில், வெங்கடேஷ் பட் அவருடைய சமூகவலைதள பக்கங்களின் வாயிலாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடுவர் விளக்கம்
இதை குறித்து, "கடந்த சில மாதங்களாக குக்கு வித் கோமாளி ஐந்தாவது சீசன் குறித்தும், அதில் நான் நடுவராகத் தொடர்ந்து பணியாற்றுவது குறித்தும் தகவல்கள் பரவி வருகின்றன. நான் இந்தச் சந்தர்ப்பத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்த சீசனில் நான் பங்கேற்கப் போவதில்லை. என்னுடன் சேர்த்து மில்லியன் கணக்கான மக்களை மகிழ்வித்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி என்னுடைய உண்மையான ஜாலியான பக்கத்தைக் காட்டி, நான் நானாக இருக்க வைத்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பயணித்த இந்த சேனலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வருகிற பிற வாய்ப்புகளை நோக்கிச் செல்வதற்கு இப்போது முடிவெடுத்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸிற்கும், இயக்குநர் பார்த்திவ் மணிக்கும் என் நன்றிகள்.
பலருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகவும், பல்வேறு பிரஷர்களில் இருந்து மக்களை விடுவித்த அற்புதமான நிகழ்ச்சியாகவும் இது இருந்தது. இது ஒரு கடினமான முடிவு. ஆனால், இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். புத்தம் புதியதொரு கான்செப்ட்டில் விரைவில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். குக்கு வித் கோமாளி சீசன் 5 புதிய டீமிற்கு எனது வாழ்த்துகள்!"என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, நடிகர் சுரேஷ் இந்த சீசனில் வெங்கடேஷ் பட்டை ரீப்லேஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.