மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்; அலறும் சைரன் - எச்சரிக்கை
சண்டிகரில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை, இந்தியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் முறியடித்தது.
எச்சரிக்கை சைரன்
இதனால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எனவே, இந்திய எல்லை மாநிலங்களில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் சண்டிகரில், எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில், "தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக விமானப்படை நிலையத்திலிருந்து வான்வழி எச்சரிக்கை வந்துள்ளது. இதன் காரணமாக சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன. அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.