தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: மத்திய குழுவினர் ஆய்வு - ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வை தொடங்கினர்.
வெள்ள பாதிப்பு
குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இடைவிடாத கனமழை பெய்தது.
இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அம்மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த 2 மாவட்ட மக்கள் உயிர்ச்சேதம், சொத்துக்கள் சேதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட பல வகைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் பல்வேறு வகையில் உயிரிழந்துள்ளனர். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய அரசு சிறப்புக் குழுவை அனுப்பி வைத்தது.
மத்திய குழுவினர் ஆய்வு
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் கே.பொன்னுசாமி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்து, வெள்ள பாதிப்புகள்குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மேலும், 2 குழுக்களாகப் பிரிந்து சென்று, அந்தோணியார்புரம், கருங்குளம், வைகுண்டம், ஏரல், ஆத்தூர், திருச்செந்தூர், காயல் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் கூறும்போது, “தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5,000 கோடிக்கு சேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முழு சேதாரம், உயிரிழப்பு விவரங்கள் விரைவில் தெரியவரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.