தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்; வாக்களித்த திரைபிரபலங்கள் - என்ன நிலவரம்!
திரை பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
வாக்குப் பதிவு
தெலங்கானா மாநிலத்தில், ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், சுமார் 3 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
திரை பிரபலங்கள்
அந்த வகையில், ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில், பாரதிய ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா தனது வாக்கை செலுத்தினார்.
அதேபோல், மத்திய அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, பர்காத்புரா தொகுதியில் வாக்களித்தார். மேலும், திரைப் பிரபலங்கள் வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், ஸ்ரீகாந்த், ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி என்ற மரகதமணி வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 8.52 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.