எப்போதும் அதே தான் ; காவிரி தண்ணீர் தராவிட்டால் இதுதான் முடிவு - துரைமுருகன் அதிரடி!
காவிரியில் தண்ணீர் திறக்காமல் இருந்தால் நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி தண்ணீர்
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று வருகின்றது. அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழக அரசு கேட்ட தண்ணீரை விடவும் கர்நாடக அரசு குறைத்து தந்திருக்கிறது. இம்முறையும், தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த நிலையில், மே தினத்தையொட்டி சென்னையில் உள்ள தொழிலாளர் நினைவுத்தூணுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
துரைமுருகன்
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,கனிமொழி உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் மே தின சிறப்புகள் குறித்து பேசினார். அப்போது அவரிடம் காவிரி நீர் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்துவிடுகிறோம் என சொல்லியிருக்கிறார்களா? இல்லை.அதிகமான தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.
காவிரி நீர் மேலாண்மை வாரியம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று சொன்ன பிறகும் திறக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்.இப்படி மத்திய அரசை மதிக்காமல் இருப்பது கர்நாடகா அரசு. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம். அதை நாடுவோம் என்று பதிலளித்துள்ளார்.