மீண்டும் சிக்கலில் சிக்கிய டிடிஎஃப் வாசன் - திருப்பதியில் வழக்குப்பதிவு!
யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்த பகுதியில் கேட்டை திறந்துவிடுவது போல் பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருந்தது.
வழக்குப்பதிவு
இந்நிலையில் தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர், இதுதொடர்பாக திருப்பதி திருமலை காவல் நிலையத்தில் வாசன் மீது புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மத உணர்வுகள், மத நம்பிக்கைகளை புண்படுத்துதல் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக கடந்த மாதம் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.