கூகுள் மேப்பை நம்பியதால் நேர்ந்த விபரீதம் - ஆற்றுக்குள் சிக்கித்தவித்த இளைஞர்கள்!
கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மேப்
கேரளா மாநிலத்திலிருந்து அப்துல் ரஷீத் என்பவர் தனது நண்பருடன் கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றார். அப்போது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பள்ளஞ்சி என்ற இடத்தில் தரைப்பாலம் இருந்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்த பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது தெரியாத அப்துல் ரஷீத், சாலையில் தான் மழைநீர் தேங்கி இருக்கிறது என நினைத்து காரை ஓட்டியுள்ளார்.
பத்திரமாக மீட்பு
அப்போது கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, அதிர்ஷ்டவசமாக அங்குள்ள ஒரு மரத்தில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர் இருவரும் காரின் கதவை திறந்து வெளியேறினர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், அவர்களது காரும் மீட்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.