பானிபூரியில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் - அதிர்ச்சி தகவல்!
சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பானிபூரி
கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால் பல்வேறு கடைகளிலிருந்து 260 பானிபூரி மாதிரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட 260 பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்துள்ளது.
எச்சரிக்கை
மேலும், 18 பானிபூரி மாதிரிகள் உண்பதற்கு தகுதியற்றவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.