VJ சித்து மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார் - காவல்துறை அதிரடி விளக்கம்!
வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வி.ஜே.சித்து
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஷெரின் என்பவர் பிரபல யூடியூபர் விஜே. சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் "விஜே சித்து விலாக்ஸ் (VJ Siddhu vlogs) சேனலில் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரக்கிதையாகவும் செல்போனில் பேசியபடி மீனம்பாக்கம் ரோட்டில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு அதனை யூடியூபிலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும். அது மட்டுமல்லாமல் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசியுள்ளார்.
காவல்துறை விளக்கம்
இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே அவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதற்காக தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த புகார் புகார் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் "யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதியில் (12.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.