ஒருவர் மட்டுமே வாழ்ந்த வினோத கிராமம்; காற்றில் கரைந்த கடைசி உயிர் - நிறைவேறாத ஆசை!
மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த கடைசி நபரும் உயிரிழந்துள்ளார்.
மீனாட்சிபுரம்
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் மீனாட்சிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,269 மக்கள் வாழ்ந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து போனது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் அந்த ஊரிலிருந்து மக்கள் காலி செய்து பிழைப்புக்காக வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர்.
கடைசி உயிர்
கடைசியாக 75 வயதான கந்தசாமி என்பவர் மட்டுமே மீனாட்சிபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். ஊரைவிட்டுச் சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும், மீனாட்சிபுரம் மீண்டும் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு அவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே கந்தசாமி இயற்கை எய்தியுள்ளார். இதனையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அந்த ஊரில் வாழ்ந்த பெரும்பாலானோர் கிராமத்துக்கு வந்திருந்தனர். இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு அந்த கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.